Monday, October 14, 2019

பரிட்சை எழுதிய கதை!

1977 ஆம் வருடம்.  நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டியில் சேர்ந்து இளம் அறிவியல் வேதியியல் (BSc Chemistry)படித்து வந்தேன். முதல் பருவத் தேர்வுக்கு(semester) ஊருக்கு வந்திருந்தேன். கொஞ்ச நாள் விடுமுறை. படித்துக்கொண்டிருந்தேன். பின்னர் கல்லூரிக்கு சென்றேன். 
பரிட்சை எழுத அனுமதி சீட்டு (  hall ticket) வாங்கச் செல்லும் போது தான் தெரிந்தது கல்லூரி அடையாள அட்டையை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன் என்று. அது இல்லாமல் அனுமதி சீட்டு தர இயலாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார்கள்.
சரி ஊருக்கு போய்விட்டு கடைசி பேருந்தில் திரும்பி வந்து விடலாம் என்று கிளம்பினேன்.
ஊருக்கு வந்தேன். நேரம் மாலை 6.00 மணி. கடைசி பேருந்து மாலை 6.30க்கு . துறையூருக்கு. பின் துறையூரிலிருந்து புத்தனாம்பட்டிக்கு கடைசி வண்டியை பிடிக்க வேண்டும்.
அடையாள அட்டையை தேடி எடுத்தேன் பின் உடனடியாக கிளம்புகிறேன் என்று சொல்லி பேருந்து நிறுத்தத்துக்கு வந்தேன் கடைசி வண்டியை பிடிக்க . ஆனால் அன்று அந்த வண்டி வரவில்லை. என்ன செய்ய? வழக்கமாக விடியற்காலையில் 5:30 க்கு செல்லும் முதல் வண்டியில் சென்றால் போய்விடலாம் என்று தந்தை கூற, சரியென்று தங்கிவிட்டேன். கல்லூரியில்  முதன் முதல் தேர்வு எழுதும்  போது இத்தனை தடங்கல்களா என்று எண்ணிக் கொண்டே தூங்கி எழுந்தேன்.
அன்று பார்த்து 5:30 க்கு வர வேண்டிய வண்டி வரவில்லை. பேருந்துகள் மிகக் குறைவாக இருந்த காலம். நகரப்பேருந்துகளும்( town bus) மிகக் குறைவு .
அப்போது பால்ய  நண்பர் மணி ஒரு யோசனை சொன்னார். ஆறு மணிக்கு மல்லியகரையில் இருந்து  ஒரு வண்டி துறையூருக்கு இருக்கிறது. அதைப் பிடிக்கலாம் என்று தமது மிதிவண்டியை எடுத்து வந்தார். வேக வேகமாக மிதித்து இரண்டு கல் தொலைவில் உள்ள  மல்லியகரை  அழைத்துச் சென்றார். அந்த வண்டியும் அப்போதுதான் நான் கிளம்பி இருந்தது. அதை பிடிக்க முடியவில்லை. ஒன்றும் புரியவில்லை என்ன செய்வது என்றும்  தெரியவில்லை அடுத்த வண்டி 8 மணிக்கு மேல்தான் வரும் அதைப் படித்தால் தேர்வு எழுத முடியாது.
அப்போது மணி சொன்னார் " சம்பத்து தம்மம்பட்டி போலாம் " என்றார். மல்லிய கரையில் இருந்து தம்மம்பட்டி 16 கல் தொலைவு. மலைப்பாங்கான சாலை . முடியுமா என்று தயங்கினேன். மணி. " வா போயிடலாம் , தம்மம்பட்டியிலிருந்து நிறைய வண்டிகள் துறையூருக்கு உண்டு" என்று கூறியவர் என்னை உட்கார வைத்து அந்த பழைய மிதிவண்டியில் அழைத்துக் கொண்டு சென்றார்.
அவ்வப்போது கொஞ்ச தூரம் நானும் மிதித்தேன். ஆனால் பெரும்பாலும் அவர் தான் மிதித்தார். விரைக்க விரைக்க தம்மம்பட்டி வந்து சேர்ந்தோம். துறையூருக்கு ஒரு வண்டி கிளம்பிக் கொண்டிருந்தது. அதை பிடித்து விட்டேன். சரியான நேரத்தில் வந்து சேர்ந்து தேர்வும் எழுதிவிட்டேன்.
அன்று அந்த தேர்வு எழுதாமல் இருந்திருந்தால்  எனது சான்றிதழில் ஒரு புள்ளி விழுந்திருக்கும். வாழ்க்கையில் arrears என்ற மறு தேர்வு எழுதாத எனது சாதனை போயிருக்கும்.
எல்லா பாடத்திலும் "All pass " என்ற பெருமைக்காக கல்லூரி என்னை கெளரவித்தது போயிருக்கும்.  இதே காரணத்தால்தான்  எனக்கு வேலைக்கான நேர்காணல் அழைப்பு கிடைத்தது; வேலையும் கிடைத்தது.
இத்தனைக்கும் காரணமான நண்பர் மணி படித்தது. 6 ஆம் வகுப்பு வரைதான்.
நன்றி மணி!

பின் குறிப்பு:
நண்பர் மணி தற்போது கொசுவலை உற்பத்தி தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபர் .
மற்றும் ராசி பள்ளிக் குழுமத்தின் ஒரு இயக்குனர். மற்றும் பல பல.... அத்தனையும் உழைப்பு!

No comments:

Post a Comment