Saturday, February 16, 2019

இறுதி மடல்!

ராணுவ வீரனின் மடல்!
எந்த நொடியில் மரணம் நேரும்
என்பதை அறியாமல் எங்கோ செல்கிறோம் நெஞ்சில் எம்மைச் சுமந்த பெற்றோர், கொஞ்சிக் கொஞ்சிக் குலாவிய குழந்தை, அன்பே உருவாய் அருள் நிறை மனையாள், ஆதரவு காட்டும் அருமை நண்பர்,
எல்லாம் துறந்து எங்கோ செல்கிறோம்! எப்போது எது நடக்கும் ? யாருக்குத் தெரியும்? அரசியல் சதுரங்க விளையாட்டில், சிப்பாய் அப்பாவிகள் அழிவது எப்போது நிற்கும்? மனிதனை மனிதன் ஏன் வெறுக்க வேண்டும்? மனிதனை மனிதன் ஏன் கொல்ல வேண்டும்?
கடும் பணியிலும் கொடுங் குளிரிலும்
முகம் தெரியா எதிரியுடன் மோதுகிறோம்.

அடுத்த விடுப்பில் செல்லும் போது அன்னைக்கு புடவை எடுக்க வேண்டும், அப்பாவிற்கு கடிகாரம் கட்ட வேண்டும்,
குட்டிப் பாப்பாவிற்கு தங்கச்சரடும்,
எட்டிப் பார்க்கும் என்னவளுக்கு கொட்டிக் கொடுக்க வேண்டும் அன்பை!

ஐயகோ அங்கே வருவதென்ன?
அக்கினிப் பிழம்பாய் வெடிக்கிறதே?
அனலும் அளவிலா நெருப்பால்
குழந்தை புரண்ட நெஞ்சம்
குப்பென்று பற்றி எறிகிறது!
அம்மா அம்மா அருகில் வா!
அப்பா அப்பா எங்கே நீங்கள்?
இன்பத்திலும் துன்பத்திலும் என்னுடன் இருந்தவளே
என்னை எனக்கே புரிய வைத்த நல்லவளே உன்னை விட்டு செல்லப் போகிறேன் கண்மணி என்னை மன்னித்து விடு! பொறுப்புகள் விட்டுச் செல்கிறேன்
கருத்துடன் மகனை காப்பாற்று.
கிழவர் பதறாமல் பார்த்துக் கொள்
கிழவி புலம்புவாள் பொறுத்துக் கொள்! கண்ணே ! கருவிழியாளே! கற்புக்கரசியே! உன்னை விட்டுச் செல்கிறேன்!
என்னை மன்னித்து விடு